Pages

30/03/2014

மாணவனின் உயிரை பலி வாங்கிய கல்வி



செல்வங்களில் அழிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. என்று கல்வியின் முக்கியத்துவத்தை பலரும் பலவிதமாக சொல்லியிருகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியரை வைத்து போற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறார்கள். இத்தகைய சிறப்புகளை கொண்ட கல்வியும், அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களும் இன்று உதவுவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அல்ல அவர்களின் இறப்புக்கு தான். கடந்த சில வருடங்களில் கல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ஆனால் அவன் நம்பிய சிவனோ முருகனோ அவனை காப்பாற்றவில்லை. அவன் நம்பிய கடவுளே அவனை கைவிட்டபோது நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று இயேசுவும் அல்லாவும் நினைத்துவிட்டார்கள் போல கடவுளர்களுக்குள் காப்பாற்றாமல் விடுவதில் போட்டி நடந்திருகிறது வென்றது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சென்றது ஒரு உயிர்.

தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளுக்காக யார் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் சிலர். ஆம் அவன் கோழை தான் தான் செய்த தவறுக்காக பிறருக்கு தண்டனை கொடுக்கும் பிறர் உயிரை கொல்லும்  வீரர்களுக்கு மத்தியில் பிறர் செய்த தவறுக்காக தனக்கு தண்டனை கொடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட அவன் கோழை தான். பாவம் மற்றவருக்கு தீங்கு செய்ய தெரியாதவன் அவன் ஒருவேளை தனக்கு மன உளைச்சலை உண்டாக்கிய அந்த ஆசிரியரை அவன் கொலை செய்திருந்தால் அவனை வீரன் என்று சொல்லியிருப்பார்களோ??? அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை அப்போது அவனுக்கு கிடைத்திருக்கும் பெயர் கொலைகாரன் கற்று கொடுத்த ஆசிரியரை கொன்ற பாவி மகா கொடூரன் என்ற பெயர்கள் அவனுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவன் தன்னையே கொலை செய்து நல்லவன் ஆகிவிட்டான். கொலை செய்பவரை  விட அதற்க்கு காரணமாக இருப்பவருக்கு தான் தண்டனை அதிகம் என்று சொல்கிறது நம் நாட்டு சட்டம். எனது நண்பன் தன்னையே கொலை செய்துகொண்டதற்கு காரணமாக அமைந்த அந்த மதிற்பிற்குரிய ஆசிரியருக்கு தண்டனை தருமா இந்த சட்டம்.? நீதியும் சட்டமும் ஏழைகளுக்கு இல்லை என்பது போல மாணவர்களுக்கும் இல்லை என்றாகிவிட்டது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்கிறார்கள் ஆனால் இளைஞர்களின் எதிர்காலம் இன்று ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. கையில் இருக்கிறது என்பதை விட அவர்களின் கால்களில் உதை  படும் பந்தாக இருக்கிறது அதை வைத்து அவர்கள் கால்பந்து விளையாடிகொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கோல் என்று நினைப்பது எதிர்காலத்தை வளமாக்குவது அல்ல மாறாக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது தான். தான் காலில் இருக்கும் பந்தை இத்தனை தடவை கோல் அடித்திருக்கிறேன் என்று ஒரு விளையாட்டு வீரன் பெருமை கொள்வது போல தன் காலில் இருக்கும் இத்தனை பேரின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளேன் என்று எண்ணி பெருமை கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை அப்பாவி மக்களிடம் காட்டி பெருமை கொள்வது போல ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை மாணவர்களின் மீது காட்டி பெருமை கொள்கின்றனர்.

ஒரு பரிட்சையில் தோல்வி என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைகிறார்கள் சிலர். மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை காண்கிறான் ஆனால் கல்வியில் தோல்வி என்பதனால் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அளவுக்கு உள்ளது இன்று மாணவர்களின் மனநிலை என்பது இன்று தற்கொலை செய்துகொள்பவர்களில் அதிகபடியானவர்கள் மாணவர்கள் என்ற புள்ளிவிவரத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஏன் அவர்கள் அப்படி நினைகிறார்கள் அவர்களை அப்படி நினைக்க வைத்தது யார் என்று பார்த்தல் இந்த சமுதாயம் தான். இந்த சமுதாயம் தான் படிக்கவில்லை என்றால் வாழ்கையில் முன்னேற முடியாது உயிர் வாழ்வதற்கே படிப்பு அவசியம் என்ற என்னத்தை பெற்றோருக்கும் மாணவருக்கும் விதைத்துள்ளது. சமுதாயமும் பெற்றோரும் ஆசிரியரும் விதைத்த வினையை இன்று மாணவர்கள் அறுத்துக்கொண்டு இருகிறார்கள். ஆம் அவர்களின் எதிர்காலம் தூக்கு கயிறுகளில் அறுபட்டு கொண்டிருகிறது. படிக்காத மேதைகளான காமராஜர்களை அதிகம் பார்த்த இந்த இந்தியாவில் இத்தகைய நிலை இருப்பது அவமானத்திற்குரியது. நன்றாக வாழ்வதற்கு அனைவருக்கும் தேவை தன்னம்பிக்கையும் விடா  முயற்சியும் ஆனால் இன்றைய கல்வி சமூகம் அதை பிஞ்சிலேயே சிதைத்து கொண்டிருகிறது.

எட்டு கல்வி கறிக்குதவாது என்பது பொன்மொழி எட்டுகல்வி சாவுக்கு உதவும் அன்று ஒரு புது மொழியை எழுதுங்கள். ஆம் புதிதாக சிந்திப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான எண்ணம் உள்ளவர்ககுக்கு இல்லை இன்றைய கல்வி மனப்பாடம் செய்யும் திறமை படைத்தவருக்கு மட்டுமே இன்றைய கல்வி. சிறு வயதிலேயே பள்ளிகூடங்களில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை முடக்குகிறார்கள். நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளைக்கு அடிபணியும் அடிமை போலவும் கமெண்டுகளுக்கு கீழ்படிந்து வேலை செய்யும் ரோபா போலவும் இருக்க சொல்கிறார்கள். இன்று பள்ளிகூடங்கள் கல்லறைகலாகவும் சிறை சாலையாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் தற்கொலையின் போதும் இந்த குற்ற சாட்டு எழுகிறது ஆனால் பெற்றவருக்கு உறைப்பதில்லை  மீண்டும் அந்த சிறை சாலையை தேடி தான் போகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே நகல் (copy) எடுத்து தேர்வி விடைத்தாளில் ஒட்ட(paste)  வேண்டும். அத்தகைய சிறந்த ஜெராக்ஸ் இயந்திர வேலைய செய்பவன் தான் சிறந்த பிள்ளையாக பெற்றோராலும் சிறந்த மாணவனாக ஆசிரியராலும் பார்க்கபடுகிறான். அவர்களை பொறுத்தவரையில் மாணவன் திருக்குறளை படிக்க வேண்டும் என்று தன நினைகிறார்களே தவிர புதிய திருக்குறளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

இன்றைய கல்வி முறையும் வாழ்கையின் வெற்றிக்கு தேவை என்ன என்பதையும் இந்த சமுதாயம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சரியான முறையில் தெளிவான சிந்தனையுடன் அணுகும் அவரை இப்படியான தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்துகொண்டே தான் இருக்கும். அதுவரை பாதிக்கப்படபோவது எனது நண்பனை போன்ற அப்பாவி மாணவர்கள்  தான்.

21/03/2014

அஜித் படங்களும் நானும்


நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித் என்ற பெயர் தான் என் காதுகளில் முதலில் ஒலித்த பெயர் அதற்கு பின்னர் தான் விஜய் என்ற பெயர் ஒலித்தது. அதற்கு காரணம் உண்டு எனது மாமா தீவிர அஜித் ரசிகர் அதனால் அவரது வீட்டில் அடிகடி அஜித் பாடல்கள் கேட்கும். அமர்க்களம் பாடல்களை நான் சிறு வயதில் பல தடவை கேட்டிருக்கிறேன். அதிலும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் இப்போதும் எனக்கு பிடித்த ஒன்று அந்த பாடலில் எஸ்.பி.பி குரலை விடவும் இன்னொரு ஸ்பெஷல் எனக்கு என்னவென்றால் அந்த பாடல் படமாக்கப்பட்டது எங்கள் ஊர் செஞ்சியில் உள்ள ராஜா கோட்டையில் தான். அது செஞ்சிகோட்டை  என்றும் அழைக்கப்படும்.

 இப்படியாக அஜித்தின் புது படம் எது வந்தாலும் நான் பார்க்கும் வாய்ப்பு என் மாமா மூலம் ஏற்ப்படும். அது ஏனோ எனக்கு அஜித்தின் படங்கள் பெரும்பாலும் பிடிக்காமல் போயவிட்டன அதற்கு காரணம் நான் முதலில் பார்த்த அஜித் படங்கள் ஜனா, ஜி, ராஜா, ஆஞ்சநேயா போன்ற மொக்கை படங்களை தான். பிறகு தான் காதல் கோட்டை வாலி போன்ற படங்களை பார்க்க முடிந்தது ஆனால் என்னுடைய முதல் அஜித் பட அனுபவங்கள் அவற்றை அஜித் பக்கம் சாயாமல் வைத்திருந்தது. நான் விஜய் ரசிகனாக மாறியதற்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை முதலில் பார்த்ததனால் கூட இருக்கலாம்.

நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித்தின் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.





நான் பார்த்த முதல் அஜித் படம்: அமர்க்களம்

எனக்கு பிடித்த அஜித் படம்: பில்லா

எனக்கு பிடிக்காத அஜித் படம்: ரெட்

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த அஜித் படம்: பில்லா

கடைசியாக பார்த்த அஜித் படம்: வீரம்

இந்த படம் ஏன் ஓடவில்லை என்று நினைத்த அஜித் படம்: கிரீடம்

இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த அஜித்  படம்: ஆரம்பம்

அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: ஏகன்

அஜித்  ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: கஜினி

அஜித்தின் ஸ்டைலை ரசித்த படம்: பில்லா

அஜித் படத்தில் பிடித்த பாடல்: ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்.

18/03/2014

விஜய் படங்களும் நானும்


முதலில் ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு காதலுக்கு மரியாதை பார்த்த பின் விஜய் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் விஜய் பாடல்களின் ரசிகனாக பின் விஜயின் படங்களுக்கு ரசிகனாக அதன் பின்னர் விஜயின் ரசிகனாக படிப்படியாக மாற்றம் அடைந்தேன். என் காதல் வாழ்கையில் விஜயின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்தன. கில்லி படத்தின் மூலம் அவரின் தீவிர ரசிகனாக மாறினேன். கில்லி படம் வந்தபோது தான் எங்கள் பள்ளியில் கபடி விளையாட்டு மிக பிரபலம் அடைந்தது. எனக்கும் படம் பார்த்த பின் கபடி மீது ஆர்வம் வந்தாலும் அதற்கு என் உடல் அனுமதிக்காததால் விளையாடவில்லை. போக்கிரிக்கு பின் கையில் கர்சிப் கட்டிக்கொண்டு சுற்றியவனில் நானும் ஒருவன்.

பள்ளியில் விஜய் படம் போட்டிருந்த கைகடிகாரத்தை கையில் கட்டியிருந்தேன். அதை பார்த்த ஒரு ஆசிரியர் இவர் காசுக்காக நடிக்கிறார் அதை நீ காசு கொடுத்து பார்ப்பது மட்டுமில்லாமல் அவர் படம் போட்ட கை கடிகாரத்தை வேறு அணிந்திருக்கிறாய் நாளை அதை கழட்டி விட வேண்டும் என்றார். அவர் படத்துக்கு கொடுக்கும் காசை நான் உங்களுக்கு தருகிறேன் உங்களால் அவரை போல 3 மணி நேரம் என்னை எல்லாவற்றையும் மறக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்று கேட்க தோன்றியது அனால் அப்போது எனக்கு ஆசிரியர் மீதுள்ள பயத்தால் கேட்க முடியவில்லை மனதோடு வைத்துகொண்டு வீட்டில் இருகொம்போது மட்டும் வாட்சை கட்டிகொண்டேன் பள்ளி செல்லும்போது கழட்டி விடுவேன்.

இப்படியாக என வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் விஜய் அவர் படங்களை பற்றிய என எண்ணங்களை பதிவு செய்யவே இந்த பதிவு. பதிவுக்கு செல்லலாம்.



முதலில் நான் பார்த்த விஜய் படம்: பூவே உனக்காக

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த விஜய்  படம்: போக்கிரி

கடைசியாக பார்த்த விஜய் படம்: ஜில்லா

எனக்கு பிடித்த விஜய் படம்: நண்பன்

எனக்கு பிடிக்காத விஜய் படம்: சுறா

இந்த படம்  இன்னும் ஓடியிருக்கலமே என்று நினைத்த விஜய் படம்: சச்சின்

இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த விஜய் படம்: சிவகாசி

விஜய்க்காக மட்டுமே பார்த்த படம்: ஜில்லா

விஜய் இருந்தும் பார்க்க முடியாத படம்:  நெஞ்சினிலே

விஜய் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: குருவி 

விஜய் ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்:
சிங்கம்,முதல்வன்

நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: ராஜபாட்டை

விஜயின் ஸ்டைலை ரசித்த படம்: போக்கிரி

விஜய் படத்தில் பிடித்த வசனம்: வாழ்க்கை ஒரு வட்டம்...

விஜய் படத்தில் பிடித்த பாடல்: மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...

விஜய் பாடியதில் பிடித்த பாடல்: கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு

15/03/2014

ரஜினி படங்களும் நானும்


நான் இப்போது விஜய் ரசிகனாக இருந்தாலும் எனக்கு முதலில் அறிமுகமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். நான் சிறு வயதாக இருக்கும்போது நான் அடிகடி வீட்டில் இல்லாமல் வெளியே சென்றுவிடுவேன். அதனால் என் அம்மா என்னை வீட்டில் இருக்க வைப்பதற்காக ரஜினி படம் ஓடுகிறது பார் என்று சொல்லி எதாவது படத்தை காட்டுவார்கள் நானும் பார்த்துகொண்டு இருப்பேன். என்னம்மா ரஜினி இன்னும் வரலன்னு கேட்டால் இப்போ வருவார் பாருடான்னு சொல்வாங்க நானும் இப்ப வருவார் அப்ப வருவார்னு பார்த்து பார்த்து முழு படத்தையும் பார்த்துவிடுவேன். என்னம்மா படமே முடிந்துவிட்டது இன்னும் வரலன்னு கேட்டால் நீ ரஜினி படம்னு சொன்னால் தான் வீட்டில் இருப்பாய் அதனால் சொல்லி பார்க்க வைத்தேனு சொல்வாங்க அப்போது எனக்கு அவர்கள் மீது கோபம் வரும் ஆனால் ஒன்றும் பண்ண முடியாது அம்மா அல்லவா அவர்கள்....

அப்படிப்பட்ட ரஜினியின் படங்களை பற்றிய என்னுடைய எண்ணங்களை பதிவு செய்ய நினைத்தான் விளைவு தான் இது. இனி பதிவுக்கு போகலாம்...





முதன் முதலில் நான் பார்த்த ரஜினி படம்: மனிதன் 

முதன் முதலில் நான் தியேட்டரில் பார்த்த ரஜினி படம்: அருணாச்சலம் 

எனக்கு பிடித்த ரஜினி படம்: பாட்ஷா

எனக்கு பிடிக்காத ரஜினி படம்: ஸ்ரீ ராகவேந்திரா

ரஜினிக்காக மட்டுமே பார்த்த படம்: தளபதி

ரஜினி இருந்தும் பார்க்க முடியாத படம்: பாபா

ரஜினி ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: குசேலன் 

ரஜினி இந்த படத்தை ஏன் நிராகரித்தார் என்று நினைத்த படம்: முதல்வன்

நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: வரலாறு

ரஜினி இந்த படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த படம்:  இந்தியன்

ரஜினியின் ஸ்டைலை அதிகம் ரசித்த படம்: படையப்பா 

ரஜினி படத்தில் பிடித்த பாடல்: காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே

எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத முதல் ரஜினி படம்: கோச்சடையான்




அடுத்த பதிவில் விஜய் படங்களை பற்றி பார்க்கலாம்.