செல்வங்களில் அழிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. என்று கல்வியின் முக்கியத்துவத்தை பலரும் பலவிதமாக சொல்லியிருகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியரை வைத்து போற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறார்கள். இத்தகைய சிறப்புகளை கொண்ட கல்வியும், அதனை கற்றுத்தரும் ஆசிரியர்களும் இன்று உதவுவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அல்ல அவர்களின் இறப்புக்கு தான். கடந்த சில வருடங்களில் கல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்களில் எனது நண்பனும் ஒருவன். அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ஆனால் அவன் நம்பிய சிவனோ முருகனோ அவனை காப்பாற்றவில்லை. அவன் நம்பிய கடவுளே அவனை கைவிட்டபோது நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று இயேசுவும் அல்லாவும் நினைத்துவிட்டார்கள் போல கடவுளர்களுக்குள் காப்பாற்றாமல் விடுவதில் போட்டி நடந்திருகிறது வென்றது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சென்றது ஒரு உயிர்.
தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளுக்காக யார் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் சிலர். ஆம் அவன் கோழை தான் தான் செய்த தவறுக்காக பிறருக்கு தண்டனை கொடுக்கும் பிறர் உயிரை கொல்லும் வீரர்களுக்கு மத்தியில் பிறர் செய்த தவறுக்காக தனக்கு தண்டனை கொடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட அவன் கோழை தான். பாவம் மற்றவருக்கு தீங்கு செய்ய தெரியாதவன் அவன் ஒருவேளை தனக்கு மன உளைச்சலை உண்டாக்கிய அந்த ஆசிரியரை அவன் கொலை செய்திருந்தால் அவனை வீரன் என்று சொல்லியிருப்பார்களோ??? அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை அப்போது அவனுக்கு கிடைத்திருக்கும் பெயர் கொலைகாரன் கற்று கொடுத்த ஆசிரியரை கொன்ற பாவி மகா கொடூரன் என்ற பெயர்கள் அவனுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவன் தன்னையே கொலை செய்து நல்லவன் ஆகிவிட்டான். கொலை செய்பவரை விட அதற்க்கு காரணமாக இருப்பவருக்கு தான் தண்டனை அதிகம் என்று சொல்கிறது நம் நாட்டு சட்டம். எனது நண்பன் தன்னையே கொலை செய்துகொண்டதற்கு காரணமாக அமைந்த அந்த மதிற்பிற்குரிய ஆசிரியருக்கு தண்டனை தருமா இந்த சட்டம்.? நீதியும் சட்டமும் ஏழைகளுக்கு இல்லை என்பது போல மாணவர்களுக்கும் இல்லை என்றாகிவிட்டது.
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்கிறார்கள் ஆனால் இளைஞர்களின் எதிர்காலம் இன்று ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. கையில் இருக்கிறது என்பதை விட அவர்களின் கால்களில் உதை படும் பந்தாக இருக்கிறது அதை வைத்து அவர்கள் கால்பந்து விளையாடிகொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கோல் என்று நினைப்பது எதிர்காலத்தை வளமாக்குவது அல்ல மாறாக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது தான். தான் காலில் இருக்கும் பந்தை இத்தனை தடவை கோல் அடித்திருக்கிறேன் என்று ஒரு விளையாட்டு வீரன் பெருமை கொள்வது போல தன் காலில் இருக்கும் இத்தனை பேரின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளேன் என்று எண்ணி பெருமை கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை அப்பாவி மக்களிடம் காட்டி பெருமை கொள்வது போல ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை மாணவர்களின் மீது காட்டி பெருமை கொள்கின்றனர்.
ஒரு பரிட்சையில் தோல்வி என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைகிறார்கள் சிலர். மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை காண்கிறான் ஆனால் கல்வியில் தோல்வி என்பதனால் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அளவுக்கு உள்ளது இன்று மாணவர்களின் மனநிலை என்பது இன்று தற்கொலை செய்துகொள்பவர்களில் அதிகபடியானவர்கள் மாணவர்கள் என்ற புள்ளிவிவரத்தை பார்க்கும் போது தெரிகிறது. ஏன் அவர்கள் அப்படி நினைகிறார்கள் அவர்களை அப்படி நினைக்க வைத்தது யார் என்று பார்த்தல் இந்த சமுதாயம் தான். இந்த சமுதாயம் தான் படிக்கவில்லை என்றால் வாழ்கையில் முன்னேற முடியாது உயிர் வாழ்வதற்கே படிப்பு அவசியம் என்ற என்னத்தை பெற்றோருக்கும் மாணவருக்கும் விதைத்துள்ளது. சமுதாயமும் பெற்றோரும் ஆசிரியரும் விதைத்த வினையை இன்று மாணவர்கள் அறுத்துக்கொண்டு இருகிறார்கள். ஆம் அவர்களின் எதிர்காலம் தூக்கு கயிறுகளில் அறுபட்டு கொண்டிருகிறது. படிக்காத மேதைகளான காமராஜர்களை அதிகம் பார்த்த இந்த இந்தியாவில் இத்தகைய நிலை இருப்பது அவமானத்திற்குரியது. நன்றாக வாழ்வதற்கு அனைவருக்கும் தேவை தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் ஆனால் இன்றைய கல்வி சமூகம் அதை பிஞ்சிலேயே சிதைத்து கொண்டிருகிறது.
எட்டு கல்வி கறிக்குதவாது என்பது பொன்மொழி எட்டுகல்வி சாவுக்கு உதவும் அன்று ஒரு புது மொழியை எழுதுங்கள். ஆம் புதிதாக சிந்திப்பவர்களுக்கும் ஆக்கபூர்வமான எண்ணம் உள்ளவர்ககுக்கு இல்லை இன்றைய கல்வி மனப்பாடம் செய்யும் திறமை படைத்தவருக்கு மட்டுமே இன்றைய கல்வி. சிறு வயதிலேயே பள்ளிகூடங்களில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை முடக்குகிறார்கள். நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளைக்கு அடிபணியும் அடிமை போலவும் கமெண்டுகளுக்கு கீழ்படிந்து வேலை செய்யும் ரோபா போலவும் இருக்க சொல்கிறார்கள். இன்று பள்ளிகூடங்கள் கல்லறைகலாகவும் சிறை சாலையாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் தற்கொலையின் போதும் இந்த குற்ற சாட்டு எழுகிறது ஆனால் பெற்றவருக்கு உறைப்பதில்லை மீண்டும் அந்த சிறை சாலையை தேடி தான் போகிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே நகல் (copy) எடுத்து தேர்வி விடைத்தாளில் ஒட்ட(paste) வேண்டும். அத்தகைய சிறந்த ஜெராக்ஸ் இயந்திர வேலைய செய்பவன் தான் சிறந்த பிள்ளையாக பெற்றோராலும் சிறந்த மாணவனாக ஆசிரியராலும் பார்க்கபடுகிறான். அவர்களை பொறுத்தவரையில் மாணவன் திருக்குறளை படிக்க வேண்டும் என்று தன நினைகிறார்களே தவிர புதிய திருக்குறளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
இன்றைய கல்வி முறையும் வாழ்கையின் வெற்றிக்கு தேவை என்ன என்பதையும் இந்த சமுதாயம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சரியான முறையில் தெளிவான சிந்தனையுடன் அணுகும் அவரை இப்படியான தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்துகொண்டே தான் இருக்கும். அதுவரை பாதிக்கப்படபோவது எனது நண்பனை போன்ற அப்பாவி மாணவர்கள் தான்.