Pages

07/11/2013

நடிப்பு கடவுள் உலக நாயகன்


முதலில் இன்று  தனது  பிறந்த நாளை கொண்டாடும் நமது உலகநாயகன் கமல் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்...



கமல் அவர்கள் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்று தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு அவர் தொட்ட உயரங்கள் சொல்லி தெரியவேண்டியவை இல்லை. நான் சிறு வயதாக இருக்கும்போது எனக்கு தெரிந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே. டிவியில் பாடல் போடும் போது ரஜினி பாட்டு போட்ட உடன் அடுத்து கமல் பாட்டு போடுவார்கள். சில நேரங்களில் கமல் பாட்டு அடுத்து ரஜினி பாட்டு என்று போடுவார்கள். யார் இவர் ரஜினிக்கு இணையாக இவருக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அப்போது நினைப்பேன். சற்று வளர்ந்த பிறகு நான் பார்த்த முதல் கமல் படம் அபூர்வ சகோதரர்கள் அந்த படம் பிடித்திருந்தது.


அதன் பிறகு சில படங்கள் பார்த்தேன் ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை ஆனால் ரஜினி படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பேன். கமல் தன் படங்களில் செய்யும் சில நடிப்புகள் அதன் பிறகு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் படம் முழுவதும் பார்க்கும் எண்ணம் இல்லது இருந்தது. அதன் பிறகு எனது நண்பர்கள் சிலர் கமல் நல்ல நடிகர் என்றும் அவரது பல படங்கள் பல விருதுகளை வாங்கியுள்ளது என்றும் கூறுவார்கள். ஆனால் எனக்கு என்றுமே ரஜினி மட்டும் தான் நடிகர் அவரது ஸ்டைல் போல யாரவது பண்ண முடியுமா என்று தோன்றும்.

பின்னர் வசூல் ராஜா படம் எனது நண்பன் மூலமாக பார்க்க நேர்ந்தது அந்த படமும் அதில் உள்ள காமெடி பிடித்திருந்தாலும் கமல் மேல் நல்ல அபிப்ராயம்  வரவில்லை. இப்படியாக நான் ரஜினிக்கு மட்டுமே ரசிகராக இருந்து அவரை மட்டுமே தமிழ் சினிமாவின் விடிவெள்ளி என்று நினைத்தேன். அதன் பிறகு மற்ற நடிகர்களின் படங்களும் சிலவற்றை பார்க்க ஆரம்பித்தேன். அதிலும் கூட ரஜினி படம் போல அதிரடியாக உள்ள படங்களை மட்டுமே பார்ப்பேன். ரஜினி படங்களுக்கு பின் நான் பார்த்த அதிரடி திரைப்படம் அஜித்தின் அமர்க்களம். அதன் பிறகு அஜித் படங்கள் சிலவற்றை பார்த்தேன் ஆனால் அவற்றில் ஏதும் பிடிக்கவில்லை. பின்னர் நான் விஜயின் திருமலை படம் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பிறகு விஜயின் கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களை தொடர்ந்து பார்த்தேன். விஜயின் மீது சற்று ஈர்ப்பு வந்தது.

ஆனாலும் ரஜினி தான் என் தலைவர் என்று மற்ற மாணவர்களுடன் பேசுவேன். அப்போதெல்லாம் எனது நண்பர்கள் அனைவருமே ரஜினி ரசிகர்கள் எனவே நாங்கள் பல நேரங்களில் ரஜினி படத்தை பற்றி பேசுவோம். அவருக்கு இணையாக தமிழ் சினிமாவில் யாருமே இல்லை என்று சொல்லி மகிழ்வோம். திடிரென்று சில நண்பர்கள் கமல் ரசிகர்களாக மாறினார்கள். என்னதான் ரஜினி ஸ்டைலாக படம் நடித்தாலும் கமல் போல அவரால் நடிக்க முடியாது என்று எங்களிடம் சண்டைக்கு வருவார்கள். நாங்கள் பலர் ரஜினி ரசிகர்களாக இருப்போம் அவர்களில் ஒருசிலர் தான் இருப்பார்கள் எனவே நாங்கள் அவர்களை சுலபமாக சமாளித்து விடுவோம். அப்படி ஒரு நாள் பேசும்போது எனது நண்பன் கமல் நடித்த அன்பே சிவம் படம் போல ரஜினியின் ஒரு படமாவது இருக்குமா சொல் என்று கேட்டான். நாங்கள் அப்படி ஒரு படம் வந்தாதா என்று திருப்பி கேட்டோம்  அவனால் பதில் பேசமுடியவில்லை.

எனக்கு அப்படி ஒரு படம் வந்தது என்பதே அவன் சொன்ன பிறகு தான் தெரியும். அதன் பின் ஒரு நாள் அன்பே சிவம் படத்தில் கமல் நடித்த ஒரு காட்சி டிவியில் பார்த்தேன் அதில் கமல் தோற்றமும் அவர் முகமும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் அடுத்த நாள் இதை எனது நண்பர்களிடம் சொல்லி ரஜினி ரசிகர்கள் நாங்கள் சேர்ந்து கமல் ரசிகர்களை கிண்டல் செய்தோம். அப்போது ஒருவன் மிக கோவமாக ஒரு காட்சி வைத்து ஏதும் சொல்ல முடியாது அழகான கமல் அதில் படத்துக்காக அப்படி நடித்திருக்கிறார். படம் பாருங்கள் அப்போது தெரியும் என்றனர். என்னடா இவன் ஏதோ ஒரு சூப்பர் ஹிட் படத்தை சொல்வது போல இந்த தோல்வி படத்தை சொல்கிறானே என்று நினைத்து அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வழியாக அதன் CD கிடைத்தது நான் மட்டும் பார்த்தல் கமல் படத்தை பார்க்க முடியாதே போர் அடிக்குமே என்று நினைத்து எனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு பார்த்தேன்.


படம் ஆரம்பித்தது ஒரு ஒரு சில நிமிடங்கள் சென்றது மாதவன் கமலின் முகத்தை பார்த்து தவறாக நினைத்து பின் அவர் அப்படி இல்லை என்று தெரிந்துகொள்வது போல ஒரு காட்சி வந்தது கமல் தோற்றத்தை பார்த்து படத்தை பற்றி தவறாக நினைத்த எனக்காகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது போல இருந்தது. அதன் பின் சில நிமிடங்கள் படம் மிக மெதுவாக சென்றுகொண்டு இருந்தது. எனக்கு போர் அடித்தது மற்ற கமல் படங்களை விட மெதுவாக செல்கிறதே இது எப்படி அவனுக்கு பிடிகிறது என்று நினைத்தேன்.எனது நண்பன் ஒருவன் எழுந்து சென்றுவிட்டான் நானும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். இந்த படத்துக்கு இப்படி ஒரு பில்டப் கொடுத்தானே அதற்காகவது முழுவதும் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் சொல்லி அவனை கிண்டல் செய்ய வேண்டும் என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் சற்று நேரம் முடிந்த பின் படம் போர் இல்லை என்றாலும் மிக நன்றாக உள்ளது என்று சொல்லுமளவுக்கு இல்லை என்று தோன்றியது கால்வாசி படம் பார்த்த நிலையில் பரவாயில்லை மெதுவாக சென்றாலும் எதோ படத்தில் இருக்கிறது என்று தோன்றியது அதுவரை படத்தை கிண்டல் செய்த எனது மற்ற நண்பர்களும் இப்போது அமைதியாக பார்த்தனர்.

படம் பார்த்து முடிக்கும் போது எங்கள் அனைவர் கண்களிலும் சில துளி நீர் இருந்தது. எனக்கு அதுவரை கமல் மேல் இருந்த அபிப்ராயத்தை அந்த ஒரு படம் மாற்றியது. இப்படி ஒரு படம் தமிழிலா எப்படி இத்தனை  நாள் பார்க்காமல் இருந்தோம். அன்பே சிவம் படத்துக்கு இணையாக நான் அதுவரை  பார்த்த அணைத்து படங்களையும் நினைத்து பார்த்தேன் ஒப்பிடவே முடியவில்லை. இப்படி ஒரு படம் எப்படி தோல்வி அடைந்தது என்ன காரணம் என்று நினைத்து வேதனை அடைந்தேன். அடுத்த நாள் எனது நண்பனை பார்க்கவே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அவனுக்கு அன்பே சிவம் படம் நான் பார்த்தது தெரியாது. பாதியிலேயே எழுந்து சென்ற நண்பன் அவனிடம் சென்று என்னடா படம் எதோ நல்ல இருக்கும்னு சொன்ன படத்தோட ஆரம்பமே பார்க்க முடியல என்று கிண்டல் செய்தான். அதற்கு அவன் நீ முழுதாக பார்த்தாயா என்று கேட்டான். அவன் அந்த மொக்கையை நான் பார்கவில்லை அவன் தான் பார்த்தான் என்று என்னை கை காட்டினான். அப்போது என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் யாரும் வரவில்லை. எனவே என்னிடம் வந்து என்னடா படம் எப்படி இருந்தது என்று சற்று தயங்கிய படியே கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இவ்வளவு நாள் அவன் சொல்வதை கேலி செய்துவிட்டு இப்போது எப்படி இதை சொல்வது என்று நினைத்தேன். அன்பே சிவம் படத்தை நினைத்து பார்த்தேன் இந்த படத்தை நன்றாக இல்லை என்று சொன்னால் வேறு எந்த படம் தான் பிடிக்கும் என்று சொல்வது என்று தெரியவில்லை. நான் அவனிடம் சரணடைந்துவிட்டேன். நீ சொன்னது சரி தான் படம் சூப்பர் என்று சொன்னேன். அருகிலிருந்த ரஜினி ரசிகன் என்னடா சொல்ற ஆரம்பமே அப்படி இருந்தது எப்படி நல்ல இருக்குனு சொல்ற என்று கேட்டான். நீ படத்தை முழுதாக பார் படம் உனக்கும் பிடிக்கும் என்றேன். நான் சொல்வதை கேட்டு கமல் ரசிகனான எனது நண்பன் என்னை ஆச்சர்யம்மாக பார்த்தான். 

நான் அவனிடம் இது போல வேறு சில நல்ல கமல் படம் இருந்தால் சொல்லுடா பார்க்கலாம் என்றேன். அவன் என் கையை பிடித்துகொண்டு என்னை கட்டியனைதான். இதை பார்த்த எனது ரஜினி ரசிகனான நண்பன் என்னடா ரொம்ப பண்றீங்க நாளைக்கு நான் படம் பார்த்துவிட்டு பேசுறேன்னு சொன்னான். அடுத்த நாள் அவன் கமல் ரசிகனாகவே மாறிவிட்டான். எங்கள் நண்பர்களில் பலருக்கும் கமல் பிடிக்க ஆரம்பித்தது. கமல் பற்றிய செய்திகளை தேடி படிக்க ஆரம்பித்தோம். அதுவரை இருந்த கமல் ரஜினி சண்டை அன்பே சிவம் படத்துக்கு அப்பறம் இல்லாமல் போனது. 

அதன் பிறகு அவரது படங்களும் அவரது செயல்களும் அவரின் மீது அதிகப்படியான ஈர்ப்பை ஏற்படுத்தியது அதுவரை எல்லா நடிகரையும் பெயர் சொல்லி வேலைக்காரனை அழைப்பது போல சொல்வது தான் வழக்கம் ஆனால் கமல் பெயரை மட்டும் கமல் சார் என்று தான் சொல்லுவேன். கமல் நடித்த பல படங்கள் வெளி வரும்போது ஓடாமல் பின்பு பலருக்கும் பிடிக்கும். இதை அவரே நான் ஓட்டபந்தயத்தில் ஓடவில்லை மாரத்தானில் ஓடிக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார். 

எனக்காக ஏதும் ரசிகர்கள் செய்யவேண்டாம் உங்கள் பெற்றோரை பாருங்கள் என்று சொல்லி ரசிகர்களை தன சுய நலத்துக்காக பயன் படுத்தாமல் இருப்பது அவரின் தனிப்பட்ட சிறப்பு ஆகும். அடுத்ததாக தனது உடல் பாகங்கள் அனைத்தையும் தானம் செய்துள்ளார் கமல் இது ஒன்று போதும் அவரின் மனதை புரிந்து கொள்வதற்கு சான்று.ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான். சினிமாதுறையில் உள்ள அனைத்தையும் கற்றவர் கமல். வணிகத்தனமான சில விஷயங்களில் தன்னை ஈடுபடுதிகொல்லாமல் தரமான படத்தை தருவது மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பவர் கமல். நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளுக்கும் தனது கருத்தை முதலில் பதிவு செயபவர் கமல். சாதி மத பேதம் இல்லாமல் மூட நம்பிக்கைகளில் ஈடுபாடு இருப்பது இவரின் தனிப்பட்ட சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த உயர்ந்த மனிதரை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.



கலைத்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன், நடிப்பு கடவுள், உலகநாயகன் கமல் சார் அவர்களுக்கு என் சார்பாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.



No comments:

Post a Comment

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்